தமிழ்நாட்டில் தற்பொழுது ஆளும் கட்சி ஊழல் செய்து விட்டாலோ அல்லது தவறு செய்து விட்டாலோ, அந்த கட்சியை சேர்த்தவர்கள் உடனே, எதிர்கட்சி தலைவர்களை "இவர் மட்டும் என்ன ரொம்ப நல்லவரா? இவர் அடிக்காத கொள்ளையா?" என்று கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். அவ்வாறே, எதிர்கட்சி செய்த தவறுகள் வெளி வரும் போது, அந்த கட்சியை சேர்த்தவர்கள் ஆளும் கட்சி மட்டும் என்ன யோக்கியமா? என்று கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். தான் சார்ந்த கட்சி அல்லது தனக்கு பிடித்த தலைவர் என்ற ஒரு சில காரணத்திற்காக, அந்த கட்சி செய்கின்ற ஊழல் / தவறு அனைத்தையும் ஆதரித்து பேசுவது மற்றும் "அந்த கட்சியினர் இந்த தவறை அவரது ஆட்சியில் செய்துள்ளார், அதனால் நாங்கள் செய்வது எந்த தவறும் அல்ல" என்று கூறுவது எந்த வகையில் நியாயமாகும்?
உங்கள் வீட்டில் யாராவது தவறு செய்து விட்டால், அவர்களை கடிந்து கொள்விர்களா? அல்லது பக்கத்துக்கு ஊரில் இதே தவறை முன்பே ஒருவன் செய்துள்ளான், அதனால் இது தவறு ஆகாது என்று விட்டு விடுவிர்களா? நமது வீட்டில் தீ பற்றி எரியும் போது அதை அணைக்க முற்படுவோமா அல்லது இது எனது வீட்டில் எரிகின்ற தீ, அதை அணைக்க மாட்டேன் என்று சொல்விர்களா?
எந்த கட்சியினர் தவறு செய்தாலும் ஊழல் செய்தாலும் அதனால் பாதிக்கப்பட போவது மக்களாகிய நாம் தான். தான் சார்ந்த கட்சி, மதம், சாதி இவைகளை விடுத்து, எந்த கட்சி தவறு செய்தாலும் அதை கண்டிக்கும் / எதிர்க்கும் மனப்பான்மை வளர வேண்டும். இது எனது கட்சி, இங்கு எது நடந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று இருந்தால் , இவர்கள் ஊழல் செய்வதையும் மக்களை சுரண்டுவதையும் யாராலும் தடுக்க முடியாது.
நமக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது, நாம் என்ன செய்தாலும் நமக்கு தான் இவர்கள் வாக்கு அளிப்பார்கள் என்ற எண்ணம் எப்பொழுதோ திராவிட கட்சி தலைவர்களுக்கு வந்து விட்டது. அதனால் தான் ஓவ்வொரு முறை ஆட்சி மாறும்போதும் ஊழல் பன்மடங்கு அதிகமாகிறது. நமக்கு மிக நன்றாகவே தெரியும், இவர்கள் மக்களை சுரண்டுகிறார்கள் என்று. இதை தெரிந்தும் கண்முடி தனமாக ஆதரிப்பது ஏன்? இந்த காரணத்தினால் தான் எந்த கட்சியும் தங்களது தவறுகளை திருத்தி கொள்ளும் எண்ணம் வர வில்லை, மாறாக அதிகரித்து கொண்டே தான் போகிறது. எந்த கட்சி தவறு செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் . குறைந்த பட்சம், அவர்கள் செய்யும் தவறுகளை ஆதரிக்காமல் இருந்தாலே போதும், நிச்சயம் மாற்றம் ஏற்படும்.
No comments:
Post a Comment