வணிகத்திற்கான 7 மூலங்கள் :
வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் !
முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே !
ஒரு வணிகம் செய்யலாம் என்று முடிவெடுத்தவுடன் ,அந்த வணிக வெற்றிக்கு என்னெவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பற்றி அறிந்து கொள்வதே வணிகத்திற்கான மூலங்கள் ஆகும் . இது நீண்ட கால கொள்கையை நிறைவேற்ற நாம் எடுத்து கொள்ளும் திட்டங்கள் ஆகும் .
க( 1 ) : தமிழில் பெயர் சூட்டுதல் :
மக்களுக்கான புரிதலை விதைப்பதே முதல் பணியாகும் .
உலகம் முழுக்க பிரபலமாக உள்ள தமிழ் தொழில் முனைவோர் சிலர் :
1. சரவண பவன் - திரு.பி.ராஜகோபால்
2. நல்லி சில்க்ஸ் - நல்லி குப்புசாமி செட்டி
3. சிக் ஷாம்பு ,Cavin kares - C .K .ரங்கநாதன்
4. ராம்ராஜ் காட்டன் - K .R .நாகராஜன்
5. ஹட்ஸன் ப்ரோக்ட்ஸ் - R .G.சந்திரமோகன்
இவர்களை போல இன்னும் பலரும் , அப்பளம் ,ஊறுகாய் , வாகன உதிரி பாகங்கள் , என்று உலக அளவில் பல்வேறு உற்பத்தி பொருள்களை தமிழ்நாட்டில் இருந்து கொண்டு சேர்த்து உள்ளனர் . இந்திய பங்கு சந்தையில் ,தங்கள் நிறுவன பங்குகளை விற்பனை செய்து முதலீடு சேர்க்கின்றனர் .
ஆனால் இவர்கள் எல்லோருமே ,தங்கள் உற்பத்தி பொருளுக்கான பெயரை முழுமையாக தமிழில் வைக்கவில்லை .அது அவர்களுடைய வியாபார யுக்தி என்று எண்ணி இருக்கலாம் .
ஆனால் , பொது மக்கள் மத்தியில் இவை தான் தமிழ்நாடு உற்பத்தி பொருள் என்ற அடையாளம் இல்லை . ஏனெனில் ஆங்கிலம் கலந்த பெயர்கள் இவை அனைத்தும் !
இது போலவே , ஆங்கிலம் கலந்த பெயர்களையே தான் சேட்டு மக்களும் தமிழ்நாட்டில் பயன்படுத்துகிறார்கள் .எனவே மக்களுக்கு வேறுபாடு தெரிந்து கொள்வதில் சிரமங்கள் உள்ளது .
கடைக்கு உள்ளே நுழைந்து முகங்களை காணும் வரை , அந்த கடையின் உரிமையாளர் தமிழரா இல்லை வேறு மக்களா என்பதை கண்டு கொள்ளவே முடிவது இல்லை .
இதன் விளைவு , மக்கள் பிற மொழியாளர்களின் பொருள்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள் . இதனால் நட்டம் , வணிகர்களுக்கே !
உ ( 2 ) : பொருள்களை இணைத்து விற்பனை செய்தல் .
அதாவது , ஒரு pizza ,kfc போன்ற வெளிநாட்டு உணவு கடைகளில் காம்போ என்ற பெயரில் பொருள்களை இணைத்து விற்பனை செய்வார்கள் . இது குறுக்கு வழி விற்பனை என்றே வழங்கப்படுகிறது . இது போன்ற கடைகளில் pizza மட்டும் தர மாட்டார்கள் . அதனுடன் சேர்த்து கோலா வும் தருவார்கள் .ஆனால் அது இலவசம் என்ற பெயரில் வரும். உண்மையில் பொருளுக்கான விலையில் கோலா வின் விலையும் இணைக்கப்பட்டுள்ளது .
இந்த சந்தையிடுதல் முறையை ,அநேகமாக இன்றைக்கு உள்ள எல்லா வெளிநாட்டு நிறுவனங்களும் பின்பற்றுகின்றன .
சட்டை விற்பனை என்றால் இரெண்டாக தருவது , செல் போன் விற்பனையில் ,அதனுடன் இணைப்பொருள்களை வழங்குவது ,மாவரைக்கும் இயந்திரத்தில் சப்பாத்தி பிசையும் இயந்திரத்தை இணைப்பது , Mixer வாங்கும் போது ,அதில் ஜூசர் இணைத்து விற்பனை செய்யப்படுகிறது .
தற்சமய சூழலை பின்பற்றி கொண்டு , சில வெளிநாட்டு ஆடை நிறுவனங்கள் ,அந்த ஆடையின் நிறத்திற்கு ஏற்ற ( Mask ) முக அணியையும் சேர்த்தே விற்பனை செய்கிறது .
௩ ( 3 ) : ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப புதிய பொருள்களை விற்பனை செய்தல் மற்றும் வாடிக்கையாளரை தீர்மானித்தல் :
இது விற்பனையை தக்க வைப்பதற்கான மிக முக்கிய வழியாகும் .
ஒரு பொருளை விற்பனை செய்ய ஆரம்பித்தால் ,அது தொடர்பான எல்லா பொருள்களையும் விற்பனை செய்வது மட்டுமல்லாது , புதிய நடைமுறைக்கு ஏற்ற பொருள்களை விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் .
உதாரணமாக , சிக் ஷாம்பூ நிறுவனர் , வெறும் ஷாம்பு விற்பனை செய்தவர் .காலத்திற்கு ஏற்ப , மக்களின் மனநிலைக்கு ஏற்ப , சிகைக்காய் கலந்து மீரா அறிமுகம் செய்தார் . பிறகு , முக அழகு என்பதில் மக்களின் கவனம் உள்ளது என்பதால் Fairever அறிமுகம் செய்தார் . தற்காலத்திற்கு ஏற்ப இப்போது புதியதாக Bacto -V ,என்ற பெயரில் பாக்டீரியா ,வைரஸ்களை அழிக்கும் தெளிப்பானை அறிமுகம் செய்துள்ளார் .இவர்கள் ஏற்கெனவே ஊறுகாய் ,தொக்கு போன்ற பொருள்களையும் அறிமுகம் செய்து உள்ளார்கள் .
நன்றாக கவனித்தால் தெரியும் , இவர்களின் பொருள்கள் அனைத்தின் வாடிக்கையாளரும் பெண்கள் தான் !
எனவே ,எந்த வணிகம் செய்தாலும் நமக்கான வடிக்கையாளர் யார் என்பதை முதலில் தீர்மானித்தல் மிக மிக அவசியம் .
இதுவே டிவிஎஸ் நிறுவனத்தை எடுத்து கொண்டால் ,அவர்களின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆண்கள் தான் !
௪ ( 4 ) : புதிய வாடிக்கையாளர்களை உருவாக்குதல் :
சாக்லேட் ,பிஸ்கட் போன்ற பொருள்களின் வாடிக்கையாளர்கள் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் . அந்த நிலை இன்று கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது . இதை வயது வந்தவர்களும் எடுத்து கொள்கிறார்கள் என்று விளம்பரங்கள் மூலம் மக்கள் மனதில் பதிவு செய்கிறார்கள் .அப்போது புதிய வாடிக்கையாளர்கள் உருவாகிறார்கள் .
கடலை மிட்டாய் ,எள்ளு உருண்டை, தேங்காய் மிட்டாய் போன்றவை உடலின் மீது அக்கறை உள்ள எல்லோரும் உண்ண வேண்டும் என்ற சமீபத்திய பிரசாரங்கள் , இவற்றிற்கான விற்பனை அளவை அதிகரித்து உள்ளது .
அது போலவே ஆண்களுக்கான ஆடை வடிவமைப்பு பெண்களுக்கும் பொருந்தும் வண்ணம் மாற்றி , பெண்களை புதிய வாடிக்கையாளராக பல்வேறு நிறுவனங்கள் பெற்றுள்ளன .
௫ ( 5 ) : எல்லா தரப்பு வாடிக்கையாளருக்கு ஏற்ப விலையை நிர்ணயித்தல் :
ஒரு வணிகத்தின் வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட வர்க்கமாக மட்டுமே இருந்தால் அது வணிகம் ஆகாது .
இந்த பணக்கார வர்க்கத்திற்கானது , நடுத்தர வர்க்கத்திற்கானது , என்ற பாகுபாடு இல்லாத நிலையில் , எல்லா தரப்பிற்கும் ,எல்லா வகையான பொருளும் போய் சேர்க்க வேண்டிய கடமை வணிகத்திற்கு உண்டு .
௬ ( 6 ) : பற்றாக்குறை இடங்களை கண்டறிதல் , புதிய சந்தைகளை உருவாக்குதல் :
ஒரு பொருள் விற்பனையில் எங்கு தேவை அதிகம் உள்ளது என்பதை கண்டறிந்து கொள்வதும் , அங்குள்ள தேவைக்கு ஏற்ப விற்பனை உள்ளதா என்பதையும் கண்டறிவது அவசியம் ஆகும் .
௭ ( 7 ) : சிறந்த சேவை :
ஒரு நுகர்வோரை ,வாடிக்கையாளராக மாற்ற வேண்டியது , சிறந்த சேவையின் கையில் தான் பெரும்பாலும் உள்ளது . விற்பனை செய்வோர் , பொருள் சார்ந்த விளக்கம் அளிப்பது , பயன்படுத்தும் முறைகளை தெளிவு செய்வது போன்றவை மிக முக்கியம் .
அதை விட முக்கியம் நுகர்வோரை மரியாதையுடன் நடத்துவது .
தமிழ்நாட்டில் பல வெளிநாட்டு பொருள்கள் விற்பனை அதிகரிக்க மூலகாரணம் இந்த நுகர்வோர் சேவை தான் !
எல்லா தரப்பு நுகர்வோரையும் ,வாடிக்கையாளர் ஆக்க வேண்டுமே தவிர ஜாதி , மதம் பார்ப்பது வணிகத்தை பாதிக்கும் !இந்த ஒற்றை காரணம் தான் , பிற நாட்டின் பொருள்கள் தமிழ்நாட்டில் தங்கள் விற்பனையை பெருக்கி கொள்ள காரணமாயின .
வணிகத்தின் இரண்டாம் நிலை நோக்கம் தான் லாபம் !
முதல் நிலை நோக்கம் வாடிக்கையாளர்களை பெறுவதே !